Wednesday, August 1, 2007

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250 பேர் படுகாய மடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தனியார் மற்றும் பொது சொத்துகள் சேதமடைந்தன. இச் சம்பவம் தொடர்பாக அல்உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி, மைசூர் வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் உள்ளிட்ட 168 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வக்கீல்கள் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்படுவதால் கோவை நகர் முழுவதும் இன்று ரெட் அலர்ட் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதலே நகரில் உச்சகட்ட டென்ஷன் நிலவியது.

கோவை பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மத ரீதியான பதற்றம் நிறைந்த உக்கடம், கோட்டை மேடு, என்.எச்., ரோடு, பிலால் எஸ்டேட், மஜீத்காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், போத்தனுõர் மற்றும் கெம்பட்டி காலனி, பூ மார்க்கெட், செல்வபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, குனியமுத்துõர், சுந்தராபுரம் பகுதிகளில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு முதலே ரோந்து சுற்றி வந்தனர். இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை மத்திய சிறைக்கு அருகில் உள்ள தனிக் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புடன் தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி காலை 10 மணிக்கு கோர்ட்டுக்குள் வந்தார். வந்த உடனேயே அவர் குற்றவாளிகள் பட்டியலை அறிவிக்கத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 153 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 14வது குற்றவாளியாக இருந்த கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மீதமுள்ள 7 பேரில் ஒருவர் ஏற்கனவே அப்ரூவர் ஆகி விட்டார். ஒருவர் சிறையில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். 5 பேருக்கு வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்துல் நசீர் மதானி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆவார். மதானி விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பாலக்காட்டில் பட்டாசுகள் வெடித்து மதானியின் விடுதலையை தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
- நன்றி : தினமலர்

No comments: