Thursday, August 9, 2007

திருச்சி மண்டல ஆஃபீஸில் அறிமுகம் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 16 மாவட்டங்கள் உள்ளன. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதனால் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டநெரிசல் என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. புரோக்கர்களின் தொல்லையும் தவிர்க்க முடியாதாக இருந்து வந்தது.பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வருபவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விவரம் தெரியாமல் புரோக்கர்களிடம் பணத்தை இழந்து வந்தனர்.

அதைக்கண்டு 1999ல் பாஸ்போர்ட் அலுவலராக இருந்த ரவி, பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில், வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1999 முதல் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ.20 மட்டும் கட்டணமாக பெற்று வந்தனர். மூன்று மாதம் முன் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். "காலதாமதம் தான் லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது' என்பதை உணர்ந்த அவர், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழி செய்தார்.
பாஸ்போர்ட் காலதாமதமின்றி கிடைத்ததால், அதற்காக லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது.விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஏற்படும் தேவையில்லாத செலவினம் குறைக்கவும், தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.லாப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களால் லாப்டாப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, திருச்சியில் தான் இத்தகைய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இம்முறையால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்; விண்ணப்பதாரர் இனி மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ. 50ஐ முன்னாள் ராணுவத்தினர் கட்டணமாக வசூலிக்கின்றனர். திருச்சியில் மூன்று நாட்களாக இரண்டு லாப்டாப் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் முன்னாள் ராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.

லாப்டாப் மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முன்னாள் ராணுவத்தினர், ""லாப் டாப்களை திறந்த வெளியில் வைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்வதால், துசி, மழை, காற்று, வெயில் போன்றவைகளால் லாப்டாப் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் போட்டுக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினர்.

No comments: