Monday, August 27, 2007

கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 1

கடந்த 1997, நவ.,29. "அல்உம்மா'வினர் மூவர், கோவை உக்கடம் வழியாக பைக்கில் சென்றனர். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்; மூவரையும், அவர் பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். இவர்களை மீட்க ஆதரவாளர்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி. அப்போது அங்கிருந்த எஸ்.ஐ.,க்கும் அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிடிபட்ட மூவரையும் விடுவிக்க இயலாது என போலீசார் கூறியதை தொடர்ந்து, அன்சாரியும் ஆதரவாளர்களும் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் உக்கடம் பகுதிக்கு வந்த "அல்உம்மா'வினர், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜை, சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதையடுத்து, கோவை நகர் முழுவதும் பயங்கர கலவரம் மூண்டது. உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நடைபாதை கடைகள், வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நகரமே வன்முறை காடாக மாறியது; மறுநாளும் கலவரம் தொடர்ந்தது. போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த போலீசாரில் ஒரு பகுதியினர், நவ., 30 காலையில் ஸ்டேட் பாங்க் ரோடு திருச்சி ரோடு சந்திப்பில் "திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்; தமிழக வரலாற்றில் போலீசார் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட சம்பவமும் அன்று அரங்கேறியது.

No comments: