Tuesday, November 27, 2007

தமுமுக - குவைத் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)

குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜா முஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற்புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.


தலைவரின் தலைமையுரையில் "இந்த இடஒதுக்கீடு 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி " கூறினார்.



சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.



மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.



அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள், தமுமுகவினர் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. தமுமுகவின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் வரவேற்பு போஸ்டர் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றது.


News from:
TMMK - Media Group

Kuwait

No comments: