Tuesday, July 24, 2007

கொள்கை மாறா மறவனே..!

அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன்,
எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.
சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.
சொல்லாலும், செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இருதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது.

No comments: