Monday, July 30, 2007

நந்திகிராமில் மீண்டும் வன்முறை:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டங்களில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் பலியானார்கள். மேலும், போலீசாருக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான விவசாயிகள் போராட்ட குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

சில வார கால அமைதிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. நந்திகிராமில் ஒரு கால்வாய் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விவசாயிகள் போராட்ட குழுவினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, மற்றொரு இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இரண்டு பேரை மார்க்சிஸ்ட் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நந்திகிராமில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டல கமிட்டி அலுவலகத்தை விவசாயிகள் போராட்ட குழுவினர் சூறையாடினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 பேர் காயம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், போலீஸ் தடியடியை கண்டித்து இன்று 12 மணி நேர பந்த்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தங்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை விவசாயிகள் போராட்ட குழுவினர் கடத்தி சென்று விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

No comments: