Monday, July 30, 2007

சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பா.ம.க. கடமையாகும்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களின் பா.ம.க பொதுக்குழு கூட்டம், திருச்சி சிதம்பரம் மகாலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரா.தாமோதரன் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பா.ம.க அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வழி காட்ட மாவட்டம் தோறும் இளைஞர் மாநாடு நடத்தப்படுகிறது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை. இதற்காக மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் அமல் படுத்த வேண்டும். இவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்திய ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ், ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பாட்டாளி மக்கள் கட்சியின்கடமையாகும். இதற்காக வருகிற 25-ந்தேதி திருச்சியில் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அரசியல் வரலாற்றிலேயே திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் மு.இசக்கி, மாநில நிர்வாகிகளான இளைஞர் சங்க செயலாளர் த.அறிவுச்செல்வன், மாணவர் சங்க தலைவர் கி.பாரிமோகன், மகளிர் சங்க துணை செயலாளர் செல்வி, இளைஞர் சங்க துணை செயலாளர் வே.செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கா.முஸ்தபா, மேற்கு தலைவர் செ.சு.பார்த்தீபன், கிழக்கு தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர்கள் (மேற்கு) ரா.ஜான் ரஸ்கின், (தெற்கு) இளமாறன், (கிழக்கு) ரா.ச.சக்தி, முன்னாள் மாநில துணை தலைவர் கேசவ ராமலிங்கம், துணை பொது செயலாளர் ப.முத்து உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் உறந்தை க.உமாநாத் வரவேற்று பேசினார். இறுதியில் தமிழக மாணவர் சங்க பொறுப்பாளர் ம.பிரின்ஸ் நன்றி கூறினார்.

No comments: