Monday, July 30, 2007

மதுரை ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை ஆயுதப்படை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் மதுரையில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இது பற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு, பழங்காநத்தம் போலீஸ் குடியிருப்பு, தெற்குவெளியில் உள்ள கிரைம் பிராஞ்ச், திடீர்நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மதுரை ஜெயில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க இருக்கிறது. இதனால் ஏராளமானோர் பலியாவார்கள் என்று கூறிவிட்டு தனது போனை துண்டித்துவிட்டார். இந்த போன் மிரட்டல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வெடிகுண்டு போலீஸ் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீடுகளில் இருந்தவர்களை உடனே வெளியேற்றி விட்டு வீடு, வீடாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வீடுகளின் அருகே உள்ள தோட்டப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. திட்டமிட்டு யாரோ வீண் வதந்தியை கிளப்பிவிட்டு இருப்பது தெரியவந்தது.

சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பா.ம.க. கடமையாகும்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களின் பா.ம.க பொதுக்குழு கூட்டம், திருச்சி சிதம்பரம் மகாலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ரா.தாமோதரன் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பா.ம.க அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வழி காட்ட மாவட்டம் தோறும் இளைஞர் மாநாடு நடத்தப்படுகிறது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை. இதற்காக மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் அமல் படுத்த வேண்டும். இவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்திய ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ், ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பாட்டாளி மக்கள் கட்சியின்கடமையாகும். இதற்காக வருகிற 25-ந்தேதி திருச்சியில் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அரசியல் வரலாற்றிலேயே திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் மு.இசக்கி, மாநில நிர்வாகிகளான இளைஞர் சங்க செயலாளர் த.அறிவுச்செல்வன், மாணவர் சங்க தலைவர் கி.பாரிமோகன், மகளிர் சங்க துணை செயலாளர் செல்வி, இளைஞர் சங்க துணை செயலாளர் வே.செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கா.முஸ்தபா, மேற்கு தலைவர் செ.சு.பார்த்தீபன், கிழக்கு தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர்கள் (மேற்கு) ரா.ஜான் ரஸ்கின், (தெற்கு) இளமாறன், (கிழக்கு) ரா.ச.சக்தி, முன்னாள் மாநில துணை தலைவர் கேசவ ராமலிங்கம், துணை பொது செயலாளர் ப.முத்து உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் உறந்தை க.உமாநாத் வரவேற்று பேசினார். இறுதியில் தமிழக மாணவர் சங்க பொறுப்பாளர் ம.பிரின்ஸ் நன்றி கூறினார்.

நந்திகிராமில் மீண்டும் வன்முறை:

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டங்களில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் பலியானார்கள். மேலும், போலீசாருக்கு ஆதரவாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான விவசாயிகள் போராட்ட குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

சில வார கால அமைதிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. நந்திகிராமில் ஒரு கால்வாய் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விவசாயிகள் போராட்ட குழுவினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, மற்றொரு இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இரண்டு பேரை மார்க்சிஸ்ட் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நந்திகிராமில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டல கமிட்டி அலுவலகத்தை விவசாயிகள் போராட்ட குழுவினர் சூறையாடினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 பேர் காயம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், போலீஸ் தடியடியை கண்டித்து இன்று 12 மணி நேர பந்த்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தங்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை விவசாயிகள் போராட்ட குழுவினர் கடத்தி சென்று விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Sunday, July 29, 2007

பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக்காரணம்

1948-ம் வருடம் மே மாதம் 14-ம் தேதிதான் இஸ்ரேல் பிறந்தது என்றபோதும் அந்த வருடம் மார்ச்சிலேயே ஆட்சி எப்படி இருக்கவேண்டும், என்ன மாதிரியான நிர்வாக அமைப்பை நிறுவவேண்டும் என்று யூதர்களின் சமூகத் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்திருந்தார் கள். அரபு தேசங்களுக்கு நடுவில் அமையும் தேசமாக இருந்தபோதும், அந்த தேசங்களின் அரசியல் அமைப்புச் சாயல் ஏதும் தன்னிடம் இருந்துவிடக் கூடாதென்பதில் இஸ்ரேல் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக இருந்தது.
மார்ச் மாதம் முதல் தேதி முதன் முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள். இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத் தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும் படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.
ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தவிர! இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத் துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார் கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு! நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளு மன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!
இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப் பட்டிருக்கிறார். மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம். இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது. பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள். ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்து விட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள் கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.
பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டு மென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.
தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்! Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.
பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.
இஸ்ரேல் நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டும். அங்கே இருவிதமான நீதி அமைப்புகள் செயல் படுகின்றன. ஒன்று சிவில் நீதிமன்றங்கள். இன்னொன்று, மத நீதிமன்றங்கள். சிவில் நீதிமன்றங்களில் வழக்கமான வழக்குகள் மட்டும் ஏற்கப்படும். திருமணம், திருமண முறிவு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், மதம் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும். குடும்ப கோர்ட் என்று இங்கே சொல்லப்படுவது போலத்தான். ஆனால் இஸ்ரேலில் குடும்பப் பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு வருமானால் மிகவும் அக்கறையெடுத்து கவனிக்கப்படும். இஸ்ரேலில் வாழ்பவர்கள் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் இஸ்ரேலில் இயங்கும் நீதிமன்றங்களை அணுக முடியும்.
அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர். இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும். ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்ப டுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.
அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம். இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை. மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது. காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு.
இதுதான், இது ஒன்றுதான். இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக் காரணம்.
பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.
இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும் வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.

Thursday, July 26, 2007

வரலாறு மன்னிக்காது!

"சுரண்டல்காரர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையாக இருக்கலாம். ஆனால், சுரண்டுபவர்களையும், சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது, மக்களை ஏமாற்றும் செயல்.''
- டாக்டர் அம்பேத்கர்

அண்மையில் நடைபெற்ற மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், 1 லட்சத்து 17,190 வாக்குகள் பதிவாகியது. நேற்று தொடங்கப்பட்ட தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் : 21,272 (மூன்றாவது இடம்). ஆனால், தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புதிய தமிழகம்' கட்சி பெற்றிருக்கும் வாக்குகள் 175. இதன் மூலம் தலித்துகள் என்ன சாதிக்க முடியும்? தேர்தல் அரசியல் கிரிமினல்மயமாகி/ஜாதிமயமாகி/லஞ்சமயமாகி விட்டது என்றெல்லாம் வாதிடலாம். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது? ‘புதிய தமிழகம்' எந்த தலித் செயல்திட்டத்தை இத்தேர்தலில் முன்னிறுத்தியது? இதுபோன்ற படுதோல்விகளுக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் தேர்தல் அரசியலைதான் - ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வாக இவர்கள் முன்வைக்கிறார்கள். இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது.
விடுதலைச் சிறுத்தைகள், 17.6.2007 அன்று நடத்திய மண்ணுரிமை மாநாட்டில் – ‘போராளிகளுக்கு சிறப்பு' என்ற தலைப்பில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போராளிகள் : 1. அய்யா வைகுண்டர் 2. தியாகி இம்மானுவேல் சேகரன் 3. ஒண்டிவீரன் 4. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்."தாழ்த்தப்பட்ட மக்களின் தலைநிமிர்விற்காக தலைகொடுத்த போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் அய்ம்பதாமாண்டு நினைவு நாளை (செப்டம்பர் 11, 2007) தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(1). "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு (அக்டோபர் 30,2007) அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும்'' - தீர்மானம் 17(3). தலை கொடுத்தவருக்கும் பாராட்டு; தலை எடுத்தவனுக்கும் பாராட்டு!மாவீரன் இம்மானுவேல் சேகரனை, இதைவிட யாரும் கொச்சைப் படுத்திவிட முடியாது. மாவீரன் இம்மானுவேல் சேகரன் படுகொலைக்கு காரணமான ஒரு ஜாதி வெறியனுக்கு அரசு விடுமுறை என்று தீர்மானம் போடுவதற்காகத்தான் - இவர்கள் இத்தனை நாட்களாக விடுதலையை அடைகாத்திருக்கிறார்கள் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்? பிற சாதிகளில் இருக்கும் ஜனநாயக சக்திகளை அங்கீகரிப்பது என்ற வகையில், பேராசிரியர் கல்விமணிக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது அளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், ஜாதி இந்து ஆதிக்கத்தின் குறியீடாக முன்னிறுத்தப்படும் ஒருவரை அங்கீகரிப்பது - ஜாதி வெறியை நியாயப்படுத்துவதாகத்தானே பொருள். விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிக்கு மூல காரணம் மேலவளவு. ஆனால், இன்றைக்கு அதிகாரப் பங்காளிகளாக இருக்கும் அவர்கள், மேலவளவு வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசை நிர்பந்திக்க மறுக்கும் காரணம், தெள்ளத் தெளிவாகி விட்டது. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்று ஒரு தலித் கட்சி இருந்தால், வரலாறு அவர்களை மன்னிக்காது.தமிழ் நாட்டில் பட்டியல் சாதியினர் என்ற தொகுப்பில் 78 (உட்) சாதிகள் உள்ளன. இதில் மூன்று சாதிகளின் பிரச்சனைகள் பற்றி மட்டுமே இன்று பரவலாகப் பேசப்படுகிறது. பிற சாதிகளின் பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. இருப்பினும், இம்மூன்று சாதிகளும்கூட சாதி அமைப்பின் படிநிலைத் தன்மைக்கு இரையாகியுள்ளன என்பதுதான் வேதனையானது. படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் அருந்ததியர்கள், தலித் (அம்பேத்கர்) கருத்தியலை தலைமையேற்று வளர்த்தெடுப்பதன் மூலம் - தற்போதைய பின்னடைவை நேர் செய்ய முடியும். ஆனால், அவர்கள் தற்பொழுதுள்ள தலித் அரசியல் கட்சிகளை அப்படியே நகல் எடுப்பதால் வந்த விளைவு, இன்று 54 அருந்ததியர் அமைப்புகள் தோன்றியுள்ளன.இந்நாட்டின் தொல்குடி மக்களை, ஆயிரக்கணக்கான சாதிகளாக கூறுபோடுவதுதான் பார்ப்பனியம். அவர்களை சாதியற்ற மக்களாக ஒன்றிணைத்து, விடுதலையை வென்றெடுப்பதுதான் அம்பேத்கரியம். தலித் இயக்கங்களின் செயல்திட்டத்தில் அம்பேத்கரியம் அச்சாணியாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்தான் எதிர்காலம் இருக்கிறது.
நன்றி:

Tuesday, July 24, 2007

கொள்கை மாறா மறவனே..!

அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன்,
எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.
சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.
சொல்லாலும், செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இருதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது.

ஷஹீத் பழனிபாபா..

பாபா அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா.
எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக் கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானை வெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது.
எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின் ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தை பிரயோகித்து சிறைக்குள் தள்ளியது.
திமுக அரசும் தனது முதுகில் குத்திய போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவா ளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.
பின்தொடர்ந்தோர் சிறிது காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,)
பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின் அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
அவர் கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பாதையில் அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
பேரருளாளன் அல்லாஹ் ஈருலகிலும் நன்மைகளை தந்தருள்வானாக..! ஆமீன்..!!

Monday, July 23, 2007

யார் இந்த பாபா...?


வெற்றிக்கும் வீரமரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன்..!
உன்னை புதைக்கவில்லை
விதைத்திருக்கின்றோம்.
உன்னில் இருந்து பூக்கட்டும்
ஆயிரமாயிரம்
புரட்சிப்பூக்கள்...!
என்றும் இறைவனின் பாதையில்
தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை
குவைத்